Thursday, April 12, 2012

ஆறாம் ஆண்டில் தமிழ்வெளி - வாசகர்கள், பயணர்களுக்கு நன்றி மற்றும் வேண்டுகோள்

தமிழ்வெளி தன் ஐந்தாம் ஆண்டை நிறைவு செய்து மகிழ்வுடன் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது...

தமிழ் இணைய பரப்பில் ஐந்தாண்டுகளை தமிழ்வெளி முடித்து தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பது தமிழ்வெளி வாசகர்கள் மற்றும் பயணர்களின் ஆதரவினால் மட்டுமே சாத்தியப்பட்ட ஒன்று. தமிழ்வெளி வாசகர்களும், வலைப்பதிவர்களுக்கும், பயணர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம். இப்பதிவின் இறுதியில் தமிழ்வெளி பயணர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழ்வெளி வலைப்பதிவு திரட்டியாக மாற்று ஊடகமாக உருவாக வேண்டுமென்ற நோக்கில் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையின் மேல் இயங்கி வருகின்றது.தமிழ்வெளியில் திரட்டப்படும் பதிவுகளுக்கு எந்த அரசியலையும் தமிழ்வெளி கடைபிடிப்பது இல்லை... எந்த குரலையும் மறுப்பதில்லை..மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள இது என்ன தமிழ்வெளி? என்ற முந்தைய கட்டுரையை படிக்கவும்.

ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ் போன்ற பல்வேறு புகழ்பெற்ற சமூக வலைபின்னல் தளங்களினால் வலைப்பதிவுகள் எழுதும் போக்கில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை போன்ற ஒரு அடிக்கடி பயன்படுத்தப்பட்டுக் கொண்டும், உணர்வுகளை உடனே கொட்டக்கூடிய ஒரு இடமாக இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை எழுதும் இடமாக வலைப்பதிவுகள் மாறியுள்ளது ஒரு வகையில் முன்னேற்றமே. இணைய வெளியில் வலைப்பதிவுகள் அதிவேக வளர்ச்சிப்போக்கு சற்று குறைந்துள்ளதை கவனிக்க இயலுகிறது என்ற போதிலும் தமிழர்களிடையேயான இணைய பரவல் என்பது மிக அதிக அளவில் விரவிக்கொண்டிருப்பதால் வலைப்பதிவுகளுக்கான வளர்ச்சியும் இடமும் தளர்ச்சியில்லாமல் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.

தமிழ்வெளி போன்ற மாற்று ஊடகங்களை மையநோக்கு ஊடகங்கள் சில நேரங்களில் அணைத்து ஆதரித்தது பெரும் மகிழ்வான நிகழ்வுகள். தமிழ்வெளி ஆரம்பித்த நாட்களிலேயே வலைப்பதிவுகளை பற்றிய கட்டுரையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தமிழ்வெளி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின் மக்கள் தொலைக்காட்சியிலும், புதிய தலைமுறை இதழிலுமாக தமிழ்வெளி பற்றிய குறிப்புகள் வெளியாகின. தமிழ்வெளி மற்றும் சிங்கை வலைப்பதிவர்கள் இணைந்து நடத்திய மணற்கேணி 2010 கருத்தாய்வு போட்டி பற்றி புதியதலைமுறை இதழ் அரைபக்க அளவில் குறிப்பிட்டிருந்தற்க்கு தம் நன்றியை புதியதலைமுறை இதழ் ஆசிரியருக்கும், கட்டுரையாளருக்கும் தெரிவிக்கின்றோம்.குறிப்பிட்ட இவ்வூடகங்கள் மட்டுமின்றி பல்வேறு பத்திரிக்கைகளின் கட்டுரைகள், இணைய தளங்களில் தமிழ்வெளி பற்றி அறிமுகப்படுத்திய அனைவருக்கும் எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.

தமிழ்வெளியை பரவலாக இணைய உலகில் அறிமுகப்படுத்திய நக்கீரன் பத்திரிக்கையின் இணையதளத்திற்க்கு பெரிய பங்கு உண்டு. இதற்க்காக நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஆசிரியருக்கும் மிக்க நன்றியை தெரிவிக்கின்றோம்.

தமிழ் இணையவெளியில் ஏன் தமிழக ஊடகவெளியிலேயே இதுவரை இல்லாத அளவிற்க்கு பெரிய அளவிலான பரிசுகளுடன் நடைபெற்ற மணற்கேணி-2009,மணற்கேணி-2010 கருத்தாய்வு போட்டியில் சிங்கை வலைப்பதிவர் குழுமத்துடன் இணைந்து தமிழ்வெளியும் பங்குபெற்றது தமிழ்வெளிக்கு ஒரு மகிழ்வான நிகழ்வு மட்டுமின்றி தமிழ்வெளி சமுதாயம் சார்ந்த முயற்ச்சிகளில் பங்களிப்பதில் எப்போதும் முனைப்பு காட்டுவதுடன் பெருமையும் அடைகிறது.

வலைப்பதிவு சேவைகள் வழங்கும் ப்லாக்கர், வேர்ட்பிரஸ் போன்ற தளங்களில் செய்யப்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றபடி உடனுக்குடன் பதிவுகளை திரட்டுவதில் தொழில்நுட்ப மாற்றங்களை தமிழ்வெளியில் செய்து வருகின்றோம்.

தமிழ்வெளி ஐந்தாண்டுகளாக தொடர்ந்து இயங்குகிற போதும் தமிழ்வெளி எப்போதும் வாசகர்களின் எண்ணிக்கையை பரபரப்பாக அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதில்லை, தமிழ்வெளியின் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, அதன் விளம்பர வடிவாக இருந்தாலும் சரி, விள்ம்பர நுட்பங்களென்றாலும் அவைகள் ஹிட்ஸ் என்பதன் அடிப்படையில் செயல்படுவதில்லை, தமிழ்வெளி கருத்துசுதந்திரம், வாசகர்கள் மற்றும் பயணாளர்களுக்கு எளிமை, பதிவுகளை திரட்டுவதில் எந்த அரசியலையும் கடைபிடிப்பதில்லை என்ற அடிப்படையில் மட்டுமே செயல்படுகிறது. இப்படியாக செயல்படுவதால் பல்வேறு இழப்புகள் குறிப்பாக டிராபிக் மற்றும் விளம்பர இழப்புகள் ஏற்பட்டாலும் தமிழ்வெளி தொடர்ந்து இப்படியாகவே செயல்படும் என்று வாசகர்களுக்கும் பயணர்களுக்கும் தெரிவிக்கின்றது.

தமிழ்வெளி தொடர்பாகவும் பதிவுகள் இணைப்பதின் பிரச்சினைகள் தொடர்பாக அனுப்பப்பட்ட மின்மடல்களுக்கு உடனடியாக சிக்கல்களை சரி செய்வதோ உடனடியாக மின்னஞ்சல் அனுப்புவதோ சில நேரங்களில் இயலாமல் ஆகிவிட்டது, இதற்க்கு நிர்வாகம் தன் வருத்தத்தை தெரிவிக்கின்றது.

தமிழ்வெளி தற்போதும் கூட தனிநபர் முயற்சியாலும் ஓய்வு நேர செயல்பாடுகள் நேர நெருக்கடி காரணமாக சில நேரங்களில் உடனுக்குடன் பதில் அனுப்பவதும் பிரச்சினைகளை சரி செய்வதுமான புரொஃபஷனலிசம் சற்று குறைவாக இருக்கும்போது வாசகர்கள் மற்றும் பதிவர்கள் மன்னித்து தயவு செய்து பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

தமிழ்வெளி குறிப்பிட தகுந்த வலைப்பதிவு திரட்டியாக மட்டுமின்றி தமிழ் இணையதள உலகிலும் குறிப்பிட தகுந்த வாசகர்களை கொண்டு பிரபலமான தளமாக விளங்கி வருகின்றது.

தமிழ்வெளி கடந்த ஐந்தாண்டுகளில் பல மடங்கு வாசகர்களை பெற்றுள்ளது, இதனால் இதுவரை மூன்று முறை திறன் மிகுந்த வழங்கிக்கு மாற வேண்டியிருந்துள்ளது. ஒவ்வொரு முறை திறன் மிகுந்த வழங்கிக்கு மாறும் போதும் வழங்கிக்கான வாடகை செலவு அதிகரிக்கின்றது. தற்போது டெடிக்கேட்டட் சர்வர் என்ற திறன் மிக்க வழங்கியில் தமிழ்வெளி இயங்குகிறது.

தமிழ்வெளி ஒரு நிறுவனமாகவோ அல்லது எந்த நிதியாதாரத்தை கொண்டுமோ செயல்படவில்லை, உடலுழைப்பையும், அறிவு சார் உழைப்பையும் வழங்கி வந்தாலும் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஆர்வத்தின் அடிப்படையில் கணிசமாக அளவில் கைப்பொருள் செலவழிக்கப்பட்டே செயல்பட்டு வருகின்றது, தமிழ்வெளியில் வலைப்பதிவர்கள் மட்டுமின்றி வேறு பல இணையதளங்களும் தங்கள் பதிவுகளை இணைத்து தமிழ்வெளியிலிருந்து வாசகர்களை பெற்றுவருகின்றனர்.

தமிழ்வெளி தம் பயணாளர்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். தமிழ்வெளி மேலும் மேலும் சிறப்பாக செயல்பட தமிழ்வெளியில் அளிக்கப்பட்டுள்ள கட்டண சேவையை பயன்படுத்தி விளம்பரங்களை கொடுத்து உதவுங்கள், இந்த விளம்பரங்களை தருவதால் தமிழ்வெளியின் செலவுகளுக்கு உதவும் அதே சமயம் இந்த விளம்பரத்துக்கு செலவழிக்கும் பணத்திற்க்கான அளவிற்க்கு விளம்பர சேவையும் விளம்பரதாரர்களுக்கு கிடைக்கும். தமிழ் இணைய விளம்பரங்கள் மிகக்குறைவான கட்டண செலவில் தமிழ்வெளியில் வழங்கப்படுகிறது.

தமிழ்வெளி தளத்தில் வழங்கப்படும் விளம்பர கட்டணம் மற்றும் விளம்பர இடங்கள் தொடர்பான விவரங்கள் இங்கே அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.


Tuesday, January 31, 2012

தமிழ்வெளி வழக்கம் போல பதிவுகளை திரட்டும் - blogger டொமைன் .com லிருந்து .in மாற்றம்

தமிழ்வெளி வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கு வணக்கம், இன்று கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் பல்வேறு வலைப்பதிவர்களின் முகவரி blogspot.com என்று முடிவடைவதிலிருந்து blogspot.in என்று முடிவடையுமாறு கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் மாற்றமடைந்துள்ளது.

இதனால் பதிவுகளை உடனுக்குடன் இணைப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன, எனினும் இந்த சிக்கல்கள் களையப்பட்டு புதியதாக தமிழ்வெளியில் மீண்டுன் .in என்று முடிவடையும் வலைப்பதிவுகளை சேர்க்காமலேயே திரட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வலைப்பதிவர்கள் எதுவும் செய்யத்தேவையில்லை, வழமை போலவே உங்கள் வலைப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ்வெளி லோகோவை அழுத்தியோ அல்லது தமிழ்வெளி தளத்தில் "பதிவை புதுப்பிக்க" பகுதியில் உங்கள் வலைப்பதிவு முகவரியை தந்தோ புதுப்பிக்கலாம்.


தமிழ்வெளியில் பதிவுகளை இணைப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தி செல்லுங்கள்.

.in என்று முடிவடையும் ப்லாக்கர்களுக்கு தமிழ்வெளியில் திரட்டுவதற்க்கு செய்யப்பட்ட இந்த ஏற்பாடு தற்காலிக ஏற்பாடே, கூகிள் நிறுவனத்தின் சேவை மாற்றம் தொடர்பாக முழுவிவரங்கள் தெரிந்த பின் இது தொடர்பான நிரந்தர ஏற்பாடு விரைவில் செய்யப்படும்.